தபால் வாக்கு முகநூலில் வெளியான விவகாரம்! ஆசிரியையின் தபால் வாக்கை வேறுநபர் முறைகேடாகப் பெற்று வாக்களித்த உண்மையை வெளிக்கொணர்ந்த TNPTF தென்காசி மாவட்டக்கிளை!


 தனது தபால் வாக்கில் குறிப்பிட்ட வேட்பாளரைத் தேர்வு செய்தபின் அதைப் புகைப்படமெடுத்து முகநூலில் வெளியிட்டதாகத் தென்காசி மாவட்டம், சுரண்டை R.C நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை திருமதி சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் என்பவரை பணியிடை நீக்கம் செய்து வெளியான தென்காசி மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் தான் இன்று அனைத்து சமூக & செய்தி ஊடகங்களிலும் தீயென பரவி வருகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, வாக்குப் பதிவு மையத்தில் யாருக்கு வாக்களித்தேன் என்று கூறுவதோ, தபால் வாக்கின் வாக்குச்சீட்டில் யாருக்கு வாக்களித்தேனென புகைப்படம் எடுத்து வெளியிடுவதோ தண்டனைக்குரிய குற்றங்களே.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உதவியை நாட, ஆசிரியை தபால் வாக்கைப் பெறவே இல்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது.

சங்கரன்கோயிலில் நடந்த இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் ஆசிரியை திருமதி சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் தனது உடல்நிலை காரணமாக தனது தபால் வாக்குக் கவரை வாங்காமலே சென்றுவிட்டார். பெறப்படாத தபால் வாக்குகளை அஞ்சல் வழியே அனுப்பி வைப்பதுதான் தேர்தல் நடை முறை.

ஆனால், ஆசிரியை திருமதி சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் அவர்களின் கையொப்பமுமின்றி யாரே வேறு நபர் ஆசிரியையின் தபால் வாக்கினைப் பெற்று அதிலுள்ள வாக்குச் சீட்டில் தனக்குப் பிடித்த வேட்பாளரைத் தேர்வு செய்து புகைப்படம் எடுத்துள்ளார்.

மேற்படி புகைப்படத்தைத் தேங்காய் வியாபாரி ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் வைரலாகப் பரவ அதைப் பார்த்த தென்காசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்க, வாக்குச் சீட்டில் இருந்த வரிசை எண்ணை வைத்து முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்திருந்தார் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர்.

தற்போது, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்டக்கிளை சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு உதவியாகக் களத்தில் இறங்கிய நிலையில் தான் மேற்கண்டவாறு ஆசிரியை தபால் வாக்கே பெறவில்லை என்பதும், வேறு யாரோ ஒருவர் முறைகேடாக ஆசிரியையின் தபால் வாக்கைப் பெற்ற உண்மையும் அதிகாரிகளுக்கும் வெளி உலகிற்கும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பயிற்சியின் போது பொறுப்பில் இருந்த வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தபால் வாக்கினைப் பெற்றவர், புகைப்படம் எடுத்தவர் & முகநூலில் வெளியிட்ட நபர் யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இப்பிரச்சினையில் உரிய காலத்தில் துரித முறையில் செயல்பட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்டக்கிளையின் செயல்பாடுகளால் தேவையற்ற மன உளைச்சலுக்கு உள்ளான ஆசிரியைக்கு நீதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தி உரிய காலத்தில் புகாரளித்த தென்காசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரது செயலால் தபால் வாக்குகளைக் கொண்டு திட்டமிடப்பட்டிருந்த அநீதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 தொடர் விசாரணையின் இறுதியில் தான் இது போன்று எத்தனை தபால் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்பது தெரியவரும்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)