சொகுசுப் பேருந்துகளை விற்க மோடி அரசு லஞ்சம் வாங்கியது” : SCANIA நிறுவனம் புகார்!
உலக அளவில் கனரக லாரிகள் மற்றும் சொகுசுப் பேருந்துகளை ஸ்கேனியா (Scania) நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்வீடன், பிரான்ஸ், நெதர்லாந்து, தாய்லாந்து, சீனா, இந்தியா, அர்ஜெண்டினா, பிரேசில், போலந்து, ரஷ்யா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் தங்களின் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஸ்வீடன் நாட்டின் செய்தி ஊடகமான எஸ்.வி.டி மற்றும் ஜெர்மனி நாட்டு ஊடகமான ஜி.டி.எப் ஆகியவை வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில், “ஸ்கேனியா நிறுவனம் இந்தியாவின் 7 மாநிலங்களில் தங்களது பேருந்துகளை விற்பனை செய்வதற்காக மாநில போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு 65 ஆயிரம் யூரோ லஞ்சம் வழங்கியுள்ளது” என தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்வீடன் நாட்டின் எஸ்.வி.டி செய்தி நிறுவனம், இந்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்காரியின் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளது. அதில், நிதின் கட்காரியின் மகள் திருமணத்துக்கு ‘ஸ்கேனியா நிறுவனம்’ சொகுசுப் பேருந்து ஒன்றைப் பரிசாக அளித்து உள்ளதாகவும், ஆனால், இந்த பேருந்தின் உரிமையாளர் விவரம் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து தகவல் சரிவர இல்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
மோடி அரசு மீதான இந்த குற்றச்சாட்டு இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘ஸ்கேனியா’ நிறுவன அதிகாரிகள், தாங்கள் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். குறிப்பாக, ஸ்கேனியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஹென்ரிச் ஹென்ரிட்சென் லஞ்ச முறைகேடுகள் அரங்கேறியது உண்மைதான் என்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இந்தியாவில் எங்கள் நிறுவனத்தின் சொகுசுப் பேருந்துகள் மற்றும் டிரக்குகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு லஞ்சம் கொடு்க்க வேண்டி இருந்தது. இதேபோல இந்தியாவின் 7 முக்கிய மாநிலங்களில் எங்கள் பேருந்துகளை விற்பதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், “பேருந்து ஒப்பந்த ஊழல் விவகாரம் மிகவும் கவலையளிக்கிறது. இதில், மத்திய அரசு மீதும், சில மாநிலஅரசுகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் தீவிர நீதி விசாரணை வேண்டும்’’ என்று காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நடைபெற உள்ள 5 மாநில தேர்தல் பரப்புரைக்குச் செல்லும் பா.ஜ.க தேசிய தலைவர்கள், நாங்கள் புனிதர்கள், கைபடியாத கரங்கள் என பேசி வருகின்றனர். ஆனால், அவர்களின் கைகள் ஊழலும், ரத்தக்கரையும் படிந்தவை என்பதை ஆங்கில செய்தி நிறுவனங்கள் இந்திய மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.