அதிமுக துண்டுடன் அமைச்சர் வேலுமணியின் மகன்


கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கட்சித் துண்டு அணிந்து கலந்துகொண்டார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ்.

திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசாவைக் கண்டித்து கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தினார் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ். அப்போது ஆ.ராசாவின் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தி அதிமுகவினர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், “ஆயிரம் கருணாநிதி சேர்ந்தால்கூட தமிழக முதல்வரின் தாய் தவுசாயம்மாளுக்கு ஈடாக முடியாது. அவர் தனது மகனை நல்ல விவசாயியாகவும், மனிதநேயம் மிக்க அரசியல் தலைவராகவும் வளர்த்துள்ளார்.

ஆனால், அவரை ஆ.ராசா கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்தால் ஆ.ராசாவால் எந்த ஊருக்குள்ளும் செல்ல முடியாது” என்று கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் கோவை பேரூர் செட்டிபாளையத்தில் நடத்திவைக்கப்பட்ட திருமண நிகழ்வில் விகாஷ் கலந்து கொண்டார். இது கோவை பகுதிகளில் நடக்கும் சில நிகழ்ச்சிகளிலும் அவர் அவ்வப்போது கலந்து கொள்கிறார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ்க்கு அதிமுகவில் இதுவரையில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகின்றது. இந்நிலையில் அதிமுக கட்சித் துண்டு அணிந்து அரசியல் நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்வதால் அவர் தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.