எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை நிறைவு..

  


திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில், வருமானவரித்துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனை நடைபெற்றது.

மாத்தூரில் உள்ள அருணை மருத்துவக்கல்லூரி, ஜீவா வேலு அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையை தொடர்ந்தனர். 80 பேர் அடங்கிய 16 குழுக்கள், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட லேப்டாக்களில் இடம்பெற்றுள்ள விவரங்களை பதிவிறக்கம் செய்தனர். இதற்கிடையே, 30 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. சென்னையில் உள்ள எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீட்டில் நடந்த சோதனையும் முடிவுக்கு வந்தது.

கரூரில் யுனைடெட் டெக்ஸ்டைல்ஸ் Export மற்றும் குளோபல் பைனான்ஸ் நிறுவனங்களில், 2வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். எ.வ.வேலு குடும்பத்தாரின் தொழில் கூட்டாளிகளாக கருதப்படுவோரின் அலுவலகங்களில் நடைபெற்ற இச்சோதனையில், 3 கோடியே 70 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தல் நேரத்தில் நெருக்கடி கொடுக்கவே வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக, திமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் நிறுவனங்களை கொண்டு, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் செயலை பாஜக செய்து வருவதாக சாடினார்.

மேலும் வரி ஏய்ப்பு புகாரில் சென்னை சவுகார்பேட்டை KJ நகைக்கடையில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர், கணக்கில் வராத ஒன்றரை கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, வருமான வரித்துறை சோதனை மிரட்டலால், திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரித்துறையினர் உள்நோக்கத்துடன் தம்மிடம் கேள்விகளை கேட்டதாகவும், பாஜக வேட்பாளர் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுவதால், அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.

இதனிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரியின் நிர்வாகி வீரபாண்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரி நிர்வாகி வீரபாண்டியின் வீட்டில் நேற்று மதியம் 12 மணி முதல் சோதனை நடைபெற்றது. விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் வேட்பாளராக உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் சோதனை நடைபெற்றது. இதில், கணக்கில் வராத 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)