“நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்துள்ளன” – காதர் மொய்தீன்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடுவது என இறுதி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 தொகுதிகளை ஸ்டாலின் நாளை அறிவிப்பார் என அக்கட்சி தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட 10 கட்சிகளுக்கு 57 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. திமுக சின்னத்தில் 187 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார். நாங்கள் கேட்ட தொகுதி கிடைத்துள்ளது. கடைய நல்லூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 தொகுதிகள் எவை என ஸ்டாலின் நாளை அறிவிப்பார் என தெரிவித்தார்.