காய்நகர்த்தும் திமுக: எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து கார்த்திகேய சிவசேனாபதி போட்டி
தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்துத் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணி தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறது. இதில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் 2 நாட்களுக்கு முன்னரே வெளியாகும் என எதிர்ப்பார்த்த நிலையில் விசிக, மார்க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது.
நேற்று மாலை மதிமுகவும், இரவு விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதிப்படுத்தப்பட்டன. இதையடுத்து இன்று மதியம் 12.30 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். இவர் அதிமுக சார்பில் போட்டியிடும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலப் பகுதிகள் அதிமுகவின் கோட்டை என்று அறியப்படும் நிலையில், எஸ்.பி.வேலுமணி தனது தொண்டாமுத்தூர் தொகுதிக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்கிறார்.
இதற்கிடையே அவரை எதிர்த்து பாரம்பரியமான குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டவரும் காங்கயம் காளைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டவருமான கார்த்திகேய சிவசேனாபதியை திமுக களமிறக்கியுள்ளது. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.