தமிழில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

 
விழுப்புரம் மாவட்டம், ஜானகிபுரத்தில் பா.ஜ.க.சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி என்பது குடும்ப ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி என்பது மக்களுக்கானத் திட்டங்களை முன்னெடுக்கும் கூட்டணியாகும். ஏழை, எளிய மக்களுக்கான அரசாக மத்திய பா.ஜ.க. அரசு உள்ளது. 

நாட்டின் தொன்மையான மொழி தமிழில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் மதிக்கின்றனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்தெடுத்த அ.தி.மு.க. இயக்கத்தோடு, பா.ஜ.க. கூட்டணி வைத்திருக்கிறது. அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம், நாட்டில் வெகுஜனத்திற்கு வீடு என்பதை உறுதிச் செய்திருக்கிறோம்.

கரோனா காலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாகப் பணியாற்றினார். நல்ல முறையில் ஆட்சி செய்ததற்காக பல்வேறு விருதுகளையும் தமிழக அரசு பெற்றுள்ளது. 

இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் கழிவறை இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். ஆயிரக்கணக்கான கிராமங்களில் பா.ஜ.க. அரசு மின் இணைப்பு வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தரமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சத்துணவுத் திட்டம் என்றால் எம்.ஜி.ஆர்.தான் நினைவுக்கு வருகிறார்.  எம்.ஜி.ஆரின் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் செயல்படுத்தினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்" என்றார்.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, இல.கணேசன், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்._

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு