பாஜக- அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

 


தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள், சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது

இந்தப் பரிசீலனையின்போது கேரளாவின் தலசேரி தொகுதி பாஜக வேட்பாளர் ஹரிதாஸின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் கையெழுத்து இல்லாததால், அவரின் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த தேர்தலில் இங்குதான் பாஜக அதிக வாக்குகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் குருவாயூர் தொகுதி பாஜக வேட்பாளர் நிவேதிதாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

கேரள மாநில பாஜக மகளிரணித் தலைவரான அவரின் வேட்புமனுவில், பாஜக மாநிலத் தலைவரின் பெயர் இடம்பெறவில்லை, இதனையடுத்து நிவேதிதாவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். வேட்புமனு நிராகரிக்கப்பட்ட இவ்விரண்டு தொகுதிகளிலும் பாஜகவை சார்ந்த யாரும் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால், இத்தொகுதிகளில் பாஜக போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளது.

மேலும் தேவிகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளரான தனலட்சுமியின் வேட்புமனு, சரியாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இந்த தொகுதியில் மனுத் தாக்கல் செய்த அதிமுகவின் மாற்று வேட்பாளரின் மனுவும் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா