நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மறைவு

கார்த்தி என்றழைக்கப்படும் நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார்.

ரேனிகுண்டா’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் தீப்பெட்டி கணேசன். அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’, அஜித்தின் ‘பில்லா 2’, விஷ்ணு விஷாலின் ‘நீர்ப்பறவை’, நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். கடைசியாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கி, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்திருந்தார் தீப்பெட்டி கணேசன்.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் தான் உடல்நலக் குறைவோடு, மிகுந்த பொருளாதார கஷ்டத்தில் இருப்பதாக வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து விஷால், ஸ்ரீமன், பிரேம் குமார், பூச்சி முருகன், பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் தீப்பெட்டி கணேசனுக்கு உதவிகளை செய்தனர். அதோடு தன்னை படப்பிடிப்பு தளத்தில் கார்த்தி எனக் கூப்பிட்டது அஜித் தான் எனக் குறிப்பிட்டு, தனது குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என அவருக்கு கோரிக்கையும் வைத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ், தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தீப்பெட்டி கணேசன், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த விஷயத்தை இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.