தோல்வியிலிருந்து தப்பிக்க சசிகலா மந்திரம்... அதிமுக அமைச்சர்களின் அதிரடி மாற்றம்..!

 


தேர்தல் நெருங்க, நெருங்க பயத்தில் சசிகலா குறித்து நல்லவிதமாக பேசி அனுதாபம் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


​எங்கே தோல்வி தங்களை தழுவி விடுமோ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் அதிமுகவில் உள்ள சில மூத்த அமைச்சர்கள். காரணம் அமமுக கட்சி அதிமுகவை பதம் பார்த்து விடும் என்பதே களநிலவரம். ஆகையால் தேர்தல் நெருங்க, நெருங்க பயத்தில் சசிகலா குறித்து நல்லவிதமாக பேசி அனுதாபம் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


அதனையொட்டியே சசிகலா பற்றிய பேச்சில் பக்குவமாக பேசி வருகிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அடுத்து டி.டி.வி.தினகரனை எதிர்த்து சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது நாங்கள் வீண் பழி சுமத்தவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயற்கையான முறையிலேயே மரணம் அடைந்தார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் இறக்கும் நிலை உண்டானது.


இதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அன்று முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா பற்றி கூறிய கருத்து சரியானதுதான். இயற்கையை யாரும் வெல்ல முடியாது. ஆனாலும் சசிகலா மீது பழி சுமத்தப்பட்டது. ஜெயலலிதா இறந்த பிறகு பல விமர்சனங்கள் உண்டானது. வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்போதைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.


முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் என யார் மீதும் வீண் பழி சுமத்தப்படவில்லை. சசிகலா, ஜெயலலிதா உடன் இருந்து அவரை கவனித்துக் கொண்டார். அதில் யாருக்கும் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. இதையேதான் ஓ.பி.எஸ் சொல்லியுள்ளார். அதிமுகவில் சசிகலா இணைவது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் தான் முடிவெடுக்க வேண்டும்.


அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. எதிர்க்கட்சிகள் எப்போதும் குற்றம் சொல்ல தான் செய்வார்கள். அவர்கள் பாராட்டுப் பத்திரம் வழங்க மாட்டார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார். இதற்கெல்லாம் காரணம் அமமுகவை பகைத்துக் கொள்ளாமல் மென்மையான போக்கை கையாண்டால் வாக்குகள் சிதறாது என்கிற திட்டம்தான் என்கிறார்கள். இந்த மூவ்மெண்டுக்கு விடாப்பிடியாக இருந்த எடப்பாடி பழனிசாமியும் வேறு வழியே இன்றி இறங்கி வந்திருப்பதாக கூறுகிறார்கள்.


எடப்பாடி பழனிசாமியை சந்தித்த போது இதுபற்றி ஓ.பி.எஸ்., எடுத்துக் கூறியுள்ளார். ‘’தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளால் வெற்றிபெறும் 60 தொகுதிகள் இருக்கின்றன. சசிகவை பகைத்து கொண்டு தென்மாவட்டங்களில் வெற்றி என்பது அவ்வளவு எளிது கிடையாது. சசிகலாவுக்கு சாதகமாக சொன்னால், முக்குலத்தோருக்கு நம் மீதான அதிருப்தி விலகும். இப்படி சொன்னால், தினகரன் கட்சிக்கும் தேவையில்லாமல் வாக்குகள் போவது குறையும். அமமுகவுக்கு செல்வது தடுக்கப்படும். அதனால்தான் அப்படி பேசினேன்" எனக் கூறி இருக்கிறார். ஆக மொத்தத்தில் தேர்தல் சமயத்தில் சசிகலா பெயரை வாக்கு வங்கிக்காக மந்திரமாகக் கூட ஓத மந்திரிகள் தயாராகி விட்டதாக கூறுகிறார்கள்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)