பட்டு சேலை கேட்டு கரையானைப் போல அரிக்கிறார்கள்”: சொந்த தொகுதி மக்களைக் கொச்சைப்படுத்து பேசிய அதிமுக நிர்வாகி!
தமிழகத்தில் மார்ச் 6ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த எடப்பாடி அரசு, சொல்லிக்கொள்ளும்படி எந்தவொரு நன்மையும் செய்யாததால், அ.தி.மு.க-வினர் தேர்தல் பிரச்சாரங்களில் பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர்.
மேலும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் அ.தி.மு.க அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துள்ளதால் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகின்றனர்.
பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட ஆளும்கட்சி அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குமாரபாளையத்தில் உயிரிழந்த வாக்காளர்களுக்கும் பட்டு சேலை வாங்கி சென்றதாக அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் கிளைச் செயலாளர் பேசிய ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று மாலை குமாரபாளையம் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க 7வது வார்டு கிளை செயலாளர் ரவி என்பவர் பேசும்பொழுது, காமராஜர் ஆட்சிக்காலத்தில் இறந்து போனவர்கள் வாக்குகளை தேர்தல் ஆணையம் இன்னும் நீக்கவில்லை. இது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.
அதுமட்டுமல்லாது, நாம் சில்வர் தட்டும் கொடுத்ததோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, வீட்டுக்கு வீடு பெண்களுக்கு சீலை பட்டுசேலை வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்கள் நிர்வாகிகளை தூங்க கூட விடவில்லை; தங்களை கரையான் புற்றுபோல் அரித்து பட்டுச்சேலை பெற்று சென்றதாகவும், வீட்டு ஜன்னல்களில் எட்டி பார்ப்பதாகவும் இறந்த பெண் வாக்காளர்களுக்கு கூட பட்டு சேலை பெற்றுச் சென்றதாக கூறியுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி பட்டுசேலை வழங்கியதை அ.தி.மு.கவினர் ஒப்புக் கொள்ளும் வீடியோ காட்சிகள் தற்பொழுது குமாரபாளையம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது. இதனை ஆதாரமாகக் கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.