மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி.


தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அண்மையில், கரோனா இரண்டாம் அலை உருவாகி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதேபோல், கரோனா தொற்றின் இரண்டாவது அலையை நோக்கி இந்தியா பயணிப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இன்று (24.03.2021) காலை தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மேலும் இரண்டு பள்ளிகளில் 7 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளியில் மூன்று மாணவர்களுக்கும், திருவையாறு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு மாணவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 187 பேருக்கும், 18 கல்லூரி மாணவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 205ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிக்கரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியான 12 பேரும் அதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.