பிரச்சாரத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டு அ.தி.மு.க எம்.பி முகமது ஜான் உயிரிழப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி முகமது ஜான் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அ.தி.மு.கவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையடுத்து, அரசியல்கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், இன்று ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் சுகுமாறனுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் அ.தி.மு.க எம்.பி முகம்மது ஜான். அவர், வீட்டில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனையடுத்து, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையின்போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதனையடுத்து, அவரது உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரச்சாரத்தின்போது எம்.பி முகம்மது ஜான் இறந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க சார்பில் 2019-ம் ஆண்டு அவர், மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு இன்னமும் 4 ஆண்டுகள் பதவிக் காலம் உள்ளது. ஜெயலலிதா அரசில் அவர், சிறுபான்மைத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.