மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரிக்கு அழைப்பு விடுத்த ஜவாஹிருல்லா!
மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியை மமக தலைவர் ஜவாஹிருல்லா நேரில் சந்தித்து பிரச்சாரத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியில் ஜவாஹிருல்லாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்பாக அக்கட்சியில் இருந்து பிரிந்து வந்த தமீமுன் அன்சாரி மனித நேய ஜனநாயகக் கட்சியை ஆரம்பித்தார். அதன் பிறகு இரு கட்சிகளும் எதிர் எதிர் அணியில் இருந்து வந்தன. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் மமக அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியை ஆதரித்து மஜக கடிதம் வழங்கியது. மஜக விற்கு திமுக கூட்டணியில் ஒரு இடம் கூட ஒதுக்கப்படாத நிலையிலும் மதச்சார்பற்ற அணியின் வெற்றிக்காக தியாகம் செய்வதாக மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தெரிவித்தார்.
இதையடுத்து, சென்னையில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அப்போது பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் தன்னையும், மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் அப்துல் சமத்தையும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என ஜவாஹிருல்லா தமிமுன் அன்சாரியிடம் கேட்டுக்கொண்டார்.