அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களிடம் பரிசுப் பொருட்கள் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் போட்டியிடும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமாருக்கு சொந்தமான கல்லூரியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.எஸ்.தண்டாயுதபாணியிடம் திமுகவினர் புகார் மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, தேர்தல்நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணி தலைமையிலான அலுவலர்கள் நேற்று முன்தினம் இரவு கல்லூரிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு மூட்டை, மூட்டையாக கட்டி பதுக்கிவைக்கப்பட்டிருந்த 650 பித்தளை பானைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை, ஏற்கெனவே பொங்கல் பரிசாக வழங்கிய பானைகளில் மீதம் உள்ளவை என விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளரான புதுக்கோட்டை 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள பாபு, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த அதிமுக கரையுடன்கூடிய வேட்டி, சேலைகள் மற்றும் பரிசுப் பொருட்களை பறக்கும்டையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
ஏற்கெனவே, அமைச்சரின் ஆதரவாளரான விராலிமலையைச் சேர்ந்த வீரபாண்டியன் வீட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் ஆவணங்களை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்தனர். அதற்கு முன்பு, இலுப்பூர் அருகே பறக்கும் படையினரின் வாகனச்சோதனையில் காரில் கொண்டுவரப்பட்ட அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெயருடன்கூடிய டைரி, அதிமுக கரையுடன்கூடிய சேலைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு, தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.