யேசு சிலுவையைச் சுமந்தது போல விராலிமலையைச் சுமக்கிறேன்: சி.விஜயபாஸ்கர் உருக்கம்


 பிபி, சுகர் உள்ளிட்ட பிரச்சினைகளை மறந்து யேசு நாதர் சிலுவையைச் சுமந்தது போல, விராலிமலை தொகுதியைச் சுமக்கிறேன் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

விராலிமலை தொகுதியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். தாய்மார்களின் வாக்குகளை ஈர்க்கும் வகையில், கடந்த முறை தனது மூத்த மகள் ரிதன்யா பிரியதர்ஷினியை களத்தில் இறக்கி தனக்காகப் பிரச்சாரம் செய்ய வைத்த விஜயபாஸ்கர், இம்முறை தனது இளைய மகள் அனன்யாவின் கையிலும் மைக்கைக் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் விராலிமலை தொகுதி, ராசநாயக்கன்பட்டி மாதா கோயில் பகுதியில் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, ''எனக்கும் சர்க்கரை, ரத்தக்கொதிப்பு இருக்கிறது, மாத்திரை சாப்பிடுகிறேன். நேரம், காலம் பார்த்து சரியாகச் சாப்பிட்டுவிட்டு, நடைப்பயிற்சி மேற்கொண்டு, மதியம் ஒரு மணி நேரம் தூங்கி ஓய்வெடுக்கலாம். இரவு 10 மணிக்கே உறங்கி, காலை 5 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சிக்குச் சென்று உடம்பைக் கவனித்துக் கொள்ளலாம்.

எனக்கு தலை சுற்றல், மயக்கம் ஆகிய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனாலும் மனதில் வெறி இருக்கிறது. எடுத்துக்கொண்ட பொறுப்பை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது,

யேசு நாதர் சிலுவையைச் சுமந்தது போல, விராலிமலை தொகுதியை நான் சுமந்து கொண்டிருக்கிறேன். என் மக்களுக்காக உழைக்கிறேன்'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை