ரயிலில் எலி, கரப்பான் பூச்சி: நீதிமன்றம் அதிருப்தி

 
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள குறைபாடுகளையும், விதிமீறல்களையும் களைய அதன் ஊழியர்களோ, ரயில்வே பாதுகாப்பு படையோ அக்கறை காட்டுவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ரயில் விபத்தில் இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி தொடர்பான நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள சேவை குறைபாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறும் போது, “ ரயில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பதில்லை.கரப்பான்பூச்சி, எலி போன்றவற்றால் பயணிகள் உடல்நலக் குறைவுக்கு ஆளாகின்றனர்.முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாதோரும் பயணிக்கின்றனர். ஓடும் ரயில்களில் கதவுகள் மூடப்படுவது இல்லை. 

பெரும்பாலான ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடை இறுதியில், ரயில்வே ஊழியர்கள், பயணிகள், மூத்த குடிமக்கள் சக்கர நாற்காலியில் செல்பவர்கள் என பல தரப்பினரும், சுமைகளுடன் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். 

தண்டவாளங்களை கடப்பதற்கான முறையான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் தண்டவாளத்தை கடக்கும் போது ஏற்படும் விபத்துகளில் பலியானவர்களுக்கு இழப்பீட்டை வழங்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 

இந்த குறைபாடுகளையும், விதிமீறல்களையும் களைய ரயில்வே ஊழியர்களும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் அக்கறையும் செலுத்தவோ, பொறுப்பேற்பதோ இல்லை” என்றார்.