லாரியைக் கடத்திய இளைஞர்... சினிமாவை விஞ்சும் அளவில் துரத்தி பிடித்த போலீசார்...
போதையில் டிப்பர் லாரியை கடத்திய இளைஞர் வெற்றிவேல்குமார் என்பவர் 4 பேரை காயப்படுத்தி விட்டு, கார் மீதும் மோதி கடுமையாக சேதப்படுத்தினார். போலீசாரிடம் சிக்காமல் போக்கு காட்டிய இளைஞர் சிக்கியது எப்படி?தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தைச் சேர்ந்த 30 வயதான ஜான்சன். லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். திங்கட்கிழமை மாலை, எட்டயபுரம் அருகே கான்சாபுரத்தில், லாரியை நிறுத்தி விட்டு, சாவியை எடுக்காமல் சாலையோர உணவகத்தில் சாப்பிடச் சென்றார். அவருடன் நண்பரும் லாரியை நிறுத்தி விட்டு உடன் சென்றார்.
அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென லாரி புறப்பட்டு செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு, தனது நண்பரின் லாரியில் ஏறித் துரத்தியுள்ளார்.
மேலாடையின்றி உள்ளாடை அணிந்த இளைஞர் ஒருவர் லாரியை ஓட்டிச் செல்வதைப் பார்த்த ஜான்சன், லாரியை நிறுத்தும்படி கூறியுள்ளார். லாரியைக் கடத்திய நபர், கோவில்பட்டி நோக்கிச் சென்றவர் குமாரகிரி அருகே திரும்பி எட்டயபுரம் நோக்கி செல்லத் தொடங்கினார்.
அதற்குள்ளாக போலீசாரும் வந்துவிட, லாரியை மறித்துள்ளனர். ஆனால் அந்த நபர் லாகவமாக லாரியை ஓட்டி தப்பி சென்றுள்ளார். இளம்புவனம் அருகே கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியுள்ளது.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி சேதமடைந்தது.
காரில் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வைகுண்டம், இசக்கி, புதுக்கோட்டையை சேர்ந்த மாடத்தி, பேச்சியம்மாள் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மற்றொரு காவலர்கள் குழு லாரியை பின் தொடர்ந்து குறுக்குச்சாலை அருகே லாரியை மடக்கினர்.
விசாரணையில், லாரியைக் கடத்தியவர், விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி நீராய்பட்டி கிராமத்தினை சேர்ந்த 27 வயதான வெற்றிவேல் குமார் என்பது தெரியவந்தது.
லாரியை கடத்திய போது வெற்றிவேல் குமார் மதுபோதையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
சாத்தூர் நகர காவல் நிலையத்தில் வெற்றிவேல் குமார் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. வெற்றிவேல் குமாரைக் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிப்பர் லாரியை மது போதையில் எடுத்து சென்ற நபரை, சினிமாவை விஞ்சும் வகையில் போலீசார் துரத்திப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.