மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்கும் அரசு நிறைவேற்ற வேண்டும்: சட்டப்போராட்டக் குழு வேண்டுகோள்
தமிழகத்தில் புதிய அரசு பதவி ஏற்றதும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தமிழகத்தில் சுகாதாரத் துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. கரோனா தடுப்புப் பணிகளில், தமிழகத்தின் வியூகத்தை, மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என ஐசிஎம்ஆர் நிறுவனமே தெரிவிக்கும் வண்ணம், அரசு மருத்துவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறோம்.
ஆனாலும், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேறாமல் இருக்கிறது. மேலும் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்கள் உருவாக வேண்டும். மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்கள் மற்றும் மேற்படிப்பு முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு பணியிட கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும்.
அரசால் அறிவிக்கப்பட்ட கரோனா நிவாரணத்தை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் மக்களுக்கான கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
கரோனாவுக்குப் பிறகு உலகம் முழுவதும் உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு சிறப்பு மரியாதைஅளிக்கப்படுகிறது. குறிப்பாகபிரான்ஸ் நாட்டில் மருத்துவர்களுக்கு வரலாறு காணாத ஊதியஉயர்வு அளிக்கப்பட்டது. கர்நாடகாவில் மருத்துவர்களின் ஊதியக்கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. ஹரியானாவில் அரசு மருத்துவர்களின் ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மருத்துவர்களின் கோரிக்கையை ஆட்சிக்காலம் முழுவதுமே நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் கரோனா தொற்றுஅதிகரிப்பதால் மீண்டும் கரோனாசிகிச்சை மையங்கள் இயங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், களத்தில் நின்று பணியாற்றும் அரசு மருத்துவர்களின் வலியைமட்டும் புரிந்து கொள்ளவில்லை.நம்மை பொறுத்தவரை, கரோனாஇல்லாத மாநிலமாக தமிழகத்தைவிரைவில் மாற்றிக்காட்டுவோம் என்ற முனைப்போடு, முழுவீச்சில் பணியாற்றி வருகிறோம்.
மீண்டும் கரோனா பரவல் அதிகரித்தால், வேலைப் பளு அதிகரிப்பதோடு, பணி செய்யும் மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்டு பாதிப்பு ஏற்படலாம். ஏன் தவிர்க்க முடியாமல் மருத்துவர்கள் உயிரிழக்கவும் நேரிடலாம். ஆனால் அப்போதும் மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற மாட்டார்கள். ஏன் கரோனா நிவாரணத்தைக் கூட நமக்கு தர விரும்பாத கல் நெஞ்சக்காரர்கள் தான் இவர்கள்.
எனவே, புதிய அரசு பதவி ஏற்றதும் வரலாற்று சிறப்புமிக்க முதல் அறிவிப்பாக, தேசிய அளவில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் 18 ஆயிரம் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி முத்திரைபதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.