கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை பவனி ஊர்வலம்..!! சிறப்பு பிரார்த்தனை..!!


 கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமான சாம்பல் புதனையொட்டி கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து தினமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தன. வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப்பயணமும் மேற்கொண்டனர். இந்நிலையில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பவனி பாளையங்கோட்டையில் கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. கைகளில் குருத்தோலைகளைப் பிடித்தபடி ஓசானா பாடல்கள் பாடி கிறிஸ்தவர்கள் பேரணியாகச் சென்றனர்.

இதுகுறித்து ஆயர் அந்தோணிசாமி கூறுகையில், குருத்தோலை ஞாயிறு என்பது தவக்காலத்தின் இறுதி ஞாயிறாகவும், புனித வாரத்தின் தொடக்க ஞாயிறாகவும் உள்ளது. இயேசு கிறிஸ்து மக்களுக்காக பாடுகளை ஏற்று மனுக்குலத்தை மீட்பதற்காக அரசருக்குரிய மரியாதையுடன் எருசலேம் நகருக்குள் நுழைந்ததை இந்த பவனி நினைவூட்டுகிறது. ஓசான்னா என்பதற்கு இயேசுவே எங்களுக்கு உதவ வாரும் என்பதே அர்த்தமாகும். இயேசுவின் சிலுவைப் பாடுகளையும், இறப்பையும் தியானித்து அவரது உயிர்ப்பின் பெருநாளை கொண்டாடி மகிழும் விதமாக விவிலியத்தின் வார்த்தையின் அடிப்படையில் தங்களை தயார்படுத்துவதன் தொடக்கமே குருத்தோலை ஞாயிறு என்றார்.

சேவியர் காலனி: மேலப்பாளையம் அருகேயுள்ள சேவியர் காலனியில் தூய பேதுரு ஆலயத்தில் சபை ஊழியர் கிறிஸ்டோபர் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற கிறிஸ்தவர்கள் இறுதியில் தேவாலயத்தை அடைந்தனர். அங்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இதேபோல புதிய பேருந்து நிலையம் அருகே சேவியர் காலனியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையார்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோனியார் தேவாலயம், மகாராஜநகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஏப்ரல் 1 ஆம் தேதி பெரிய வியாழன் திருச்சடங்குகளும், 2 ஆம் தேதி புனிதவெள்ளி நிகழ்வுகளும் பேராலயத்தில் நடைபெறுகிறது. 3 ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஈஸ்டர் பண்டிகை திருப்பலி நடைபெறுகிறது.