பெண் காவலர் தற்கொலை முயற்சி.. தந்தை பகீர் புகார்..

 


காவல்நிலைய உளவுப் பிரிவு போலீசார் அளித்த தவறான தகவலால், பெண் காவல் உயரதிகாரி அவமானப்படுத்தியதாகக் கூறி, பெண் காவலர் சிவகாமி தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்டுள்ளார். 


சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் 38 வயதான சிவகாமி. இவர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். தேர்தலை முன்னிட்டு, சிவகாமி சேலையூர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார். மார்ச் 2ம் தேதி அங்கு பணியில் சேர்ந்த நிலையில், பாக்கியுள்ள பணிகளை முடித்துத் தரும்படி பீர்க்கன்காரணை காவல்நிலைய ஆய்வாளர் பொன்ராஜ் அழைத்துள்ளார்.

சிவகாமி மறுக்கவே, சேலையூர் காவல்நிலைய ஆய்வாளர் சீனிவாசன் மூலம் அழைத்துள்ளார். அதற்கும் சிவகாமி மறுக்கவே, சேலையூர் உதவி ஆணையர் சகாதேவன் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில், மார்ச் 3ம் தேதி பீர்க்கன்காரணை காவல்நிலையத்தி்ற்கு சென்று பணியாற்றியுள்ளார் சிவகாமி.

அதைப் பார்த்த காவல்நிலைய உளவுப் பிரிவு போலீசார், சிவகாமி சேலையூருக்கு செல்லவே இல்லை என உயரதிகாரியான தெற்கு இணை ஆணையர் லட்சுமியிடம் தவறான தகவலை அளித்துள்ளார். உடனடியாக வாக்கிடாக்கியில் அழைத்து லட்சுமி, அடுத்த ஒரு மணிநேரத்தில் சேலையூர் காவல்நிலையத்தில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பதறியடித்துக் கொண்டு சேலையூர் காவல்நிலையம் சென்று பணியாற்றியுள்ளார் சிவகாமி. தொடர்ந்து மார்ச் 6ம் தேதி, சிவகாமியிடமும் சேலையூர் காவல் ஆய்வாளர் சீனிவாசனிடமும் லட்சுமி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, சிவகாமியை அவர் ஒருமையில் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சிவகாமி, கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட மற்ற போலீசார் சிவகாமியை உடனடியாக மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தற்பொழுது வரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது மகளை மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் பேசி தற்கொலைக்குத் துாண்டிய தெற்கு இணை ஆணையர் லட்சுமியின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாமியின் தந்தை நவநீதகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.

அதையடுத்து தான் காவல்துறை உயரதிகாரிகள், சிவகாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர் என்கிறார் நவநீதகிருஷ்ணன் சிவகாமி தற்கொலை முயற்சி வழக்கில் காவல்துறை உயரதிகாரிகள் உரிய விசாரணை நடத்துவார்களா?

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா