செல்வமோகன்தாஸ் பாண்டியன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனைவி மீது தேர்தல் அதிகாரியிடம் புகார்..!
தென்காசி மாவட்டத்தின், அ.தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ.வான செல்வமோகன்தாஸ் பாண்டியனின் மனைவி ஜெகதா, அவரது சொந்த ஊரான பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு அவ்வையார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். செல்வமோகன்தாஸ் பாண்டியன் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதால் அத்தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் தபால் வாக்குகளில் தனது கணவருக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தொலைப்பேசியின் மூலம் பேசி வருவது தெரியவந்தது.
இதுகுறித்து தி.மு.க.வின் தென்காசி தெற்கு மா.செ.வான சிவபத்மநாபன் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான சமீரனிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, “அரசு ஊழியரான எம்.எல்.ஏ.வின் மனைவி பள்ளிக்கே செல்வதில்லை. தேர்தல் பணி மற்றும் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல், தொகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று, தலைமை ஆசிரியரின் செல்ஃபோன் மூலமாக அங்கு பணியாற்றுகிற ஆசிரியர்களிடம் ‘நீங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
நீங்க தபால் ஓட்டு போட்டாலும் அதை நாங்கதான் போடுவோம். என் கணவர்தான் ஜெயிச்சி வருவார். உங்களை நாங்க ட்ரான்ஸ்பர் பண்ணிடுவோம்’னு ஆசிரியர்களை மிரட்டி வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறார். அவர் சட்டவிரோதமான செயலைச் செய்துகொண்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சமீரனிடம் புகார் கொடுத்திருக்கறோம். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுப்போம்” என்றார் தி.மு.க. மா.செ. சிவபத்மநாபன்.