அதிமுக- காங்கிரஸ் மோதும் தென்காசி தொகுதி


பாண்டியர்களின் கட்டடக் கலைக்கு சான்றாய் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாய் நிற்கும் காசி விஸ்வநாதர் ஆலயமும், ‘தென்னகத்தின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் குற்றாலம் அருவிகளும் இம்மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களாக திகழ்கின்றன.குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் சுற்றுலாத்துறை பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

சீசன் காலங்களில் குளித்து மகிழ ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் குற்றாலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக் கணக்கான மக்கள் பயனடைகிறார்கள்.

தென்காசி சட்டமன்ற தொகுதியில் தென்காசி, வீரகேரளம்புதூர் ஆகிய 2 தாலுகாக்களும், தென்காசி நகராட்சியும், குற்றாலம், சுரண்டை, சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி, மேலகரம் ஆகிய நகர பஞ்சாயத்துகளும், தென்காசி, கீழப்பாவூர் ஆகிய யூனியன்களும் அமைந்துள்ளன.
பாவூர்சத்திரம், சுரண்டை பகுதியில் விளையும் காய்கறிகள், கேரள மாநிலத்துக்கு தினமும் 100-க்கணக்கான வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் பெரிதும் பயனடைகின்றனர்.

விவசாயம், சுற்றுலா, கைத்தறி மற்றும் பல சிறிய அளவிலான தொழில்கள் ஆகியவை இத்தொகுதியின் பொருளாதாரத்தை முக்கிய மாக கட்டமைக்கின்றன. அடுத்தபடியாக மர அறுவை ஆலை தொழிலும் இங்கு சிறந்து விளங்குகிறது.
பெரும்பாலான பெண்கள் பீடி சுற்றும் தொழிலாளர்களாகவும் உள்ளனர். செங்கல் சூளைகளும் கணிசமாக உள்ளன. தற்போது மென்பொருள் துறையும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

தென்காசியில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 974 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 48 ஆயிரத்து 532 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியின் மொத்த வாக்குசாவடிகள் 326.

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இதுவரை 15 முறை சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் 7 முறையும் அ.தி.மு.க. 3 முறையும், தி.மு.க. 2 முறையும், சமத்துவ மக்கள் கட்சி, த.மா.கா., சுயேட்சை தலா ஒரு முறையும் வென்றுள்ளனர்.


நீண்ட நாள் கோரிக்கையான தென்காசி தனி மாவட்டமானதும், ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதும் தொகுதி மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

அதே நேரத்தில் செண்பக கால்வாய் அமைக்கும் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும், புதிய கலெக்டர் அலுவலகம் உள்பட மாவட்டத்திற்கான உள் கட்டமைப்பு வசதிகளை விரைந்து ஏற்படுத்த வேண்டும், தென்காசி- நெல்லை 4 வழிச்சாலை திட்டம், குடிநீர் பிரச்னைகள் உள்ளிட்டவைகளை தொகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

தென்காசி தொகுதியைப் பொருத்த வரையில் நாடார், முக்குலத்தோர், தலித் வாக்குகள் அதிகமாக உள்ளன. தென்காசி தொகுதியில் சுற்றுலா துறையை சார்ந்த விடுதிகள், வணிக வளாகங்கள் அதிகளவில் உள்ளன. ஆனாலும் படித்த இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களை நியமித்தும், நவீன மருத்துவ உபகரணங்களை வழங்கியும், அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமானது. தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட பின்னர் போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.

போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ரிங் ரோடு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
குற்றாலத்தை உலக வரைபடத்தில் இடம் பெறச் செய்யும் வகையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை தொகுதி மக்கள் முன் வைத்து உள்ளனர்.

புதிதாக மாவட்டம் பிரிக்கப்பட்டதற்கு பின்னர் தென்காசி சட்டசபை தொகுதி முதலாவது சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் அதிமுக போட்டியிடுகிறது. தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு மீண்டும் வாய்ப்ப வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 500 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தார். இதனால் இந்த முறை கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.
1952- சுப்பிரமணியம் பிள்ளை (காங்கிரஸ்)
1957- சட்டநாத கரையாளர் (சுயேட்சை)
1962- சுப்பையா முதலியார் (காங்கிரஸ்)
1967- சிதரம்பரம் பிள்ளை (காங்கிரஸ்)
1971- சம்சுதீன் என்ற கதிரவன் (தி.மு.க.)
1977- முத்துச்சாமி (காங்கிரஸ்)
1980- சட்டநாத கரையாளர் (அ.தி.மு.க.)
1984- வெங்கடரமணன் (காங்கிரஸ்)
1989- -பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்)
1991- -பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்)
1996- ரவி அருணன் (த.மா.கா.)
2001- அண்ணாமலை (அ.தி.மு.க.)
2006- கருப்பசாமி பாண்டியன் (தி.மு.க.)
2011- சரத்குமார் (ச.ம.க.) (அ.தி.மு.க.கூட்டணி)
2016- செல்வமோகன்தாஸ் பாண்டியன் (அ.தி.மு.க.)

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு