விபத்தில் சிக்கிய அமைச்சர் வேலுமணி, சபாநாயகர் தனபால்
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த பிரசார கூட்டத்தில் பிரதமருடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். மேலும், இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களும் பங்கேற்கிறார்கள்.
இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.15 மணிக்கு கோவை விமானநிலையத்திற்கு வந்து அங்கிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் சென்றார்.
அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதியம் தாராபுரத்திற்கு வருகை தந்தார்.
இந்நிலையில் பிரசாரம் நடைபெறும் இடத்துக்குச் செல்ல அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபால் இருவரும் ஒன்றாக வந்துள்ளனர். இவர்கள் திருப்பூர் -தாராபுரம் சாலை காதபுள்ளபட்டி அருகே வந்த போது முன்னே சென்று கொண்டிருந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயணித்த காரின் மீது பின்னால் வந்த சபாநாயகர் தனபால் பயணம் செய்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் உடன் சென்ற இரண்டு காவலர்கள் லேசான காயமடைந்தனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்ற கார் பின்புறம் சேதமடைந்தது. இதனையடுத்து வேறு காரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், சபாநாயகர் தனபால் இருவரும் புறப்பட்டு பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர்.