தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அரசுப்பள்ளி மாணவி..
தமிழகத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவர், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய ராக்கெட் ஏவுதளத்தை பார்வையிடத் தேர்வாகி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.*
*"நான் இதுவரை கரூரை தாண்டியதில்ல ஆனா, விண்வெளி ஆய்வு மையத்துல இருந்து ராக்கெட் விண்ணில் சீறிப்பாயும் நிகழ்வை பார்க்கப் போறேன், இஸ்ரோவுக்கு செல்வேன்னு கனவுலயும் நான் நினைச்சதில்ல" என்று அந்த மாணவி நெகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.*
*கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள பஞ்சப்பட்டியில் செயல்பட்டு வருகிறது, அரசு மேல்நிலைப் பள்ளி.
இந்தப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி சிவரஞ்சனிதான், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில், மண்ணில் இருந்து விண்ணிற்கு ராக்கெட் பறக்கும் நிகழ்வை காணத் தேர்வாகியிருக்கிறார்.*
*கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, 'ஸ்ரீசக்தி ஸ்பேஸ் மிஷன்' என்ற அறிவியல் விநாடி வினா போட்டியை, 'இந்திய விண்வெளி தொழில்நுட்பம்' என்ற தலைப்பில், இணைய வழியில் (ஆன்லைன்) மூன்று கட்டமாக நடத்தியது.*
*இப்போட்டியில், தென்னிந்திய அளவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா, கேரளம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மத்திய, மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த 15,000 மாணவர்கள் கலந்துகொண்டனர். அந்த 15,000 பேரும் முதற்சுற்று எழுத்துத்தேர்வை எழுதினார்கள்.
இந்த இணையவழி ஆன்லைன் போட்டியில் சிவரஞ்சனி உள்பட கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.*
*அப்படி நடைபெற்ற போட்டியில் அரையிறுதிச்சுற்றில் 1,000 மாணவர்கள், இறுதிச்சுற்றில் 250 மாணவர்கள் எனத் தேர்வுபெற்று, இறுதியாக இஸ்ரோ செல்ல 100 மாணவர்கள் தேர்வு பெற்றனர்.
அவர்களில் ஒரு மாணவியாகத்தான், பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சு.சிவரஞ்சனி 6-ம் இடம் பெற்றுத் தேர்வாகி தமிழகத்திற்கும், அரசுப் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.*
*இஸ்ரோ செல்லத் தேர்வான மாணவி சிவரஞ்சனிக்கு, விண்வெளி சார்ந்த இணையவழி பயிற்சியை, இந்தப் பள்ளியில் பணியாற்றும் முதுகலை இயற்பியல் ஆசிரியர் தனபால் வழங்கியிருந்தார்.
இஸ்ரோ செல்லும் மாணவி சிவரஞ்சனி மற்றும் வழிகாட்டி ஆசிரியர் தனபால் ஆகியோர், கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.பெ.மகேஸ்வரியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இஸ்ரோ செல்லும் மாணவியை பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.*