திமுக வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி: சோழிங்கநல்லூர் தொகுதியில் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
சோழிங்கநல்லூர் பகுதி அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாகும். இங்கு திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன், நாம் தமிழர் கட்சியில் ச.மைக்கேல் வின்சென்ட் சேவியர், அமமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் முருகன், மநீம சார்பில் ராஜீவ்குமார் ஆகிய முக்கிய வேட்பாளர்கள் போட்டி களத்தில் உள்ளனர்.
தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர் கரோனவால் பாதிக்கப்பட்டிருப்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது.
மருத்துவமனையில் வேட்பாளர் சிகிச்சை பெற்று வந்தாலும் சமூக வலைதளங்களிலும் தொலைபேசியில் பலரிடம் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், மருத்துவமனையில் இருந்தவாறு நிர்வாகிகளை வாக்கு சேகரிக்க ஊக்கப்படுத்தி வருகிறார். அவருக்காக கூட்டணி கட்சி மற்றும் திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். இதேபோல் திமுக தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.