7 பேரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

 


கடலூரில் அமைச்சர் எம்.சி சம்பத்தின் ஆதரவாளர்கள் 7 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி சம்பத் போட்டியிடும் நிலையில், சூரப்பநாயகன்சாவடியில் உள்ள அவரது ஆதரவாளர் மதியழகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதேபோன்று ஒப்பந்ததாரர் சுரேஷ், மீனவர் சரவணன் உட்பட 7 பேருக்கு சொந்தமான 8 இடங்களில் சோதனை நடைபெற்றது.


இதேபோல, திருப்பூரில் முக்கிய தொழிலதிபரும், மக்கள் நீதி மய்யம் கட்சி பொருளாளருமான சந்திரசேகரனின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் 8 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று சந்திரசேகரனின் சகோதரரும், மதிமுக திருப்பூர் மாவட்ட துணை செயலாளருமான கவின் நாகராஜ், அவரது நண்பரும், திமுக தாராபுரம் நகர செயலாளருமான தனசேகரன் ஆகியோரின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டது.

இதேபோன்று வருமானவரித்துறை சோதனை அரசியல் காரணத்திற்காக நடந்திருக்கலாம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி  தலைவர் கமல்ஹாசனும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, திமுக கூட்டணி கட்சியினர் வருமானவரித்துறை சோதனைக்கெல்லம் பயப்படமாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அதேநேரம், தேர்தலை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும், அதனை தடுக்கவே வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுவதாகவும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.