முன்னாள் அமைச்சர் உட்பட 7பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் உள்ளிட்ட 7 பேர்அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜுக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், அவர் திமுகவில் இணைந்துள்ளார். இவ்வாறு மாற்றுக் கட்சியில் இணைந்தவர்கள், தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்கள் என 7 பேர்அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுகவின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.நீலகண்டன், காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்ஆர்.வி.ரஞ்சித்குமார், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜ்,விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் என்.எஸ்.வாசன், ஏ.ஆர்.மணிகண்டன், எஸ்.ராமராஜ் பாண்டியன், கே.கே.வேல்முருகன் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்