56 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் பறிமுதல்... தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

 


சென்னை எழும்பூரில் இருந்து கேரளா செல்லும் கொல்லம் ரயிலின் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில், மதுரையில் இருந்து 3 பேர் பயணித்துள்ளனர். தற்போது இரு மாநிலத்திலும் தேர்தல் நடைபெற உள்ளதால், கேரளாவின் தென்மலையில், ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். ரயிலின் எஸ்1 பெட்டியில் பயணித்த மதுரையை சேர்ந்த 3 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ஒருகோடியே 22, 55 ,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் செங்கணூர் பகுதியில் உள்ள ஒரு நகைக் கடைக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தனர். இதையடுத்து சதீஸ்குமார், ராஜீவ் காந்தி, தியாகராஜன் ஆகிய 3 பேரை கைது செய்து புனலூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் சென்னையில் இருந்து வந்த வேனை மடக்கி சோதனையிட்டதில் 47 லேப்டாப்கள், 10 செல்போன்கள், 51,000 ரொக்கம் 20 ATM கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போளூரை அடுத்த எட்டிவாடி கூட்ரோட்டில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 2,45,000 ரூபாய் ரொக்க பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திருப்பூரில் எஸ்ஏபி சிக்னல் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் டெம்போவில் எடுத்து வரப்பட்ட இரண்டு லட்சத்து 40,000 ரூபாய் மதிப்பிலான 445 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் பொல்லிக்காளிபாளையத்தில் உள்ள ஆலையில் இருந்து கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக அரிசி மூட்டைகளை எடுத்து வந்தது தெரியவந்தது. ஆலை உரிமையாளர் உரிய ஆவணங்களை சமர்பித்த்ததும் 5 மணி நேரத்திற்கு பின்னர் அரிசி மூட்டைகளுடன் டெம்போவை விடுவித்தனர்.

இதனிடையே, திருவாரூர் மாவட்டத்தில் பறக்கும்படையினர் சோதனையில் 20 கோடி ரூபாய் தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மன்னார்குடியை அடுத்த வடுவூர் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும்படையினர் சிறிய ரக கண்டெய்னர் லாரியை பிடித்து சோதனை நடத்தினர். இதில், 9 கோடியே 82 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் சிக்கின.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 19 கோடியே 28 லட்சம் மதிப்பிலான 65 கிலோ தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட விசாரணையில் நகைக் கடைகளில் பழைய நகைகளுக்கு பதிலாக புதிய நகைகளை மாற்றுவதற்காக தனியார் நிறுவனம் சார்பில் நகைகள் அனுப்பி வைக்கபப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நகைகளை பெற்றுக் கொள்ளும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதேபோன்று சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் நகைக் கடைக்கு சொந்தமான வாகனத்தை மடக்கி சோதனையிட்டதில் 36 கோடி மதிப்பிலான 237 கிலோ தங்க நகைகள் சிக்கின. அவற்றிற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. வாகன ஓட்டுனர் உட்பட மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)