தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் 3-ந்தேதி அமித்ஷா பிரசாரம்

 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர்களும் தமிழகத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.


தேசிய தலைவர் நட்டா சென்னையில் நேற்று பிரசாரம் செய்தார். பிரதமர் மோடி வருகிற 1-ந்தேதி குமரி மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து மதுரையில் நடக்க உள்ள பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள்.

நெல்லை தொகுதியில் பா.ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்தும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 3-ந்தேதி நெல்லையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக பா.ஜனதாவினர் பிரசார பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாளையில் உள்ள பெல் மைதானம், வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

விரைவில் பிரசாரத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கட்சியினர் தெரிவிக்கின்றனர். அவரது வருகையையொட்டி நெல்லையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.