கே.சி.வீரமணிக்கு 3,000 கோடி சொத்து எப்படி வந்தது?”: அம்பலப்படுத்திய அமைச்சரின் அக்கா மகன்!


 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.ம.மு.க சார்பில், அவரது உடன்பிறந்த மூத்த சகோதரியின் மகன் தென்னரசு சாம்ராஜ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தென்னரசு சாம்ராஜ் தொகுதி முழுவதும் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனது மாமாவான கே.சி.வீரமணியைக் குறிவைத்தே பிரச்சாரத்தில் பேசி வருகிறார். இதனிடையே சமீபத்தில் தென்னரசு சாம்ராஜ், தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசுகையில் கே.சி.வீரமணி தொடர்பாக பேசிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், “அ.தி.மு.க அமைச்சராக இருக்கும் கே.சி.வீரமணி இந்த முறை வெற்றிபெற்றால், நான் ஊரிலேயே இருக்கப் போவதில்லை. அதற்கு நீங்கள் துளியும் இடம்கொடுத்துவிடவேண்டாம்.

இந்த தேர்தலில் அவர் டெபாசிட் கூட வாங்கக் கூடாது; எட்டு ஆண்டுகளாக நம்மையெல்லாம் அடிமையாக வைத்திருக்கிறார் கே.சி.வீரமணி. அவர் அமைச்சராவதற்கு முன்பு இருந்த சொத்துப்பட்டியலையும், அமைச்சரான பின்னர் இருந்த சொத்துப்பட்டியலும் என்னிடம் உள்ளது.

அவர் யாரைவேண்டுமானாலும் ஏமாற்றிவிடலாம். ஆனால் என்னை ஏமாற்ற முடியாது. அவர் வளர்ந்ததே என் அப்பாவால்தான், பீடி சுற்றிக்கொண்டிருந்த கே.சி.வீரமணி பென்ஸ் காரில் பிறந்து வளர்ந்ததுபோல பொய் பேசி திரிகிறார்.

சாதரண பீடி வியாபாரம் செய்து வந்த கே.சி.வீரமணிக்கு 2,000, 3,000 கோடி அளவிற்கு சொத்து வந்தது எப்படி? அது எல்லாம் மக்களை ஏமாற்றி சம்பாதித்த பணம். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர் தான் கே.சி.வீரமணி” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது சகோதரியின் மகனே, தனது ஊழல் குறித்து பிரச்சாரம் செய்து வருவதால், அமைச்சர் கே.சி.வீரமணி கலக்கமடைந்துள்ளார்.