வாக்கு அட்டையை வைத்து ஏ.டி.எம்மில் பணம் எடுக்க முயற்சி... மது பிரியரால் 30 நிமிடங்கள் மக்கள் அலைக்கழிப்பு!

 


உசிலம்பட்டியில் மதுபோதையில் ஏடிஎம் எந்திரத்தில் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற முதியவரால் வாடிக்கையாளர்கள் அலைக்கழிப்பட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் எப்போதும் நீண்ட க்யூ இருக்கும். இந்த நிலையில் முதியவர் ஒருவர் மது போதையில் தள்ளாடி கொண்டே ஏடிஎம் மையத்துக்குள் புகுந்தார்.

உள்ளே போனவர் போனவர்தான் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் வெளியே காத்திருந்தவர்கள் சலித்து கொண்டார்கள். ஒருகட்டத்தில் சிலர் ஏடிஎம் மையத்துக்குள் சென்று பார்த்தனர். அப்போது ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி அந்த முதியவர் பணத்தை எடுக்க முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு இதை வைத்து எடுத்தால் எப்படி பணம் வரும் என்று அவரிடத்தில் அங்கிருந்தவர்கள் கூறினர். ஆனால் மது போதையில் இருந்த அந்த முதியவர் அதெல்லாம் இல்லை இதை வைத்துத்தான் இத்தனை காலம் நான் பணம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னவரே மீண்டும் மீண்டும் தன் வாக்காளர் அட்டை வைத்து படம் எடுக்க முயன்றார்.

சுமார் 30 நிமிடங்கள் மற்றவர்களுக்கு வழிவிடாமல் அவர் ஒருவரே பணத்தை எடுக்க முயல கியூவில் இருந்தவர்கள் நொந்து போனார்கள். ஆனால் என்ன முயன்றும் பணம் வராத காரணத்தால் ஏடிஎம் இயந்திரம் பெப்பர் ஆகிவிட்டது என்று அங்கிருந்தவர்களிடத்தில் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இந்த காட்சியை அங்கிருந்த இளைஞர் வீடியோவாக இணைய தளத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.