இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 2.38 டன் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்;4 பேர் கைது..

 


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 2.38 டன் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் மஞ்சள் உள்ளிட்ட நறுமணப் பொருட்களுக்கு அந்நாட்டு அரசு கூடுதல் சுங்கவரியை விதித்துள்ளது. இதனால் இவை அங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

எனவே, இலங்கை வியாபாரிகள் கூடுதல் லாபம் பெறும் நோக்கத்துடன் சுங்கவரி செலுத்தாமல் தரகர்கள் மூலம் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவில் இருந்து கடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்பட இருப்பதாக நேற்று முன்தினம் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி எஸ்ஐகள் ஜீவமணி தங்கராஜ், வேலாயுதம், வில்லியம் பெஞ்சமின் மற்றும் போலீஸார் நேற்று அதிகாலை தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திரேஸ்புரம் முத்தரையர் காலனி பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் ஈரோட்டில் இருந்து மினி லாரி ஒன்று கடலோரத்தில் வந்து நின்றது. அதிலிருந்து 5 பேர் வேக, வேகமாக மஞ்சள் மூட்டைகளை கடலில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகில் ஏற்றினர். இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் மினி லாரியையும், படகையும் சுற்றி வளைத்து 5 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருச்சி கொலக்குடி, தொட்டியம், வடக்கு தெருவைச் சேர்ந்த தண்டபாணி (25), மினி லாரி உரிமையாளர் திருச்சி அருகே மேட்டுப்பட்டி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நூருல்அமீன் (37), திருப்பூர், ராக்கியபாளையம், ஆர்கேசி தோட்டத்தைச் சேர்ந்த முருகேஷ் (24), தூத்துக்குடி, தாளமுத்து நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (49) என்பது தெரியவந்தது. 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். 

தப்பியோடிய விஜயகுமார் என்பவரை தேடி வருகின்றனர். கடத்துவதற்காக படகில் ஏற்றிய 27 மஞ்சள் மூட்டைகள், மினி லாரி மற்றும் அதில் இருந்த 43 மஞ்சள் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 70 மூட்டைகளில் 2 ஆயிரத்து 380 கிலோ மஞ்சள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். பின்னர் அவற்றை கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!