கூட்டணி ஓ.கே.. 177 தொகுதிக்கு அதிமுக வேட்பாளர்கள் ரெடி - சஸ்பென்சில் இருக்கும் 10 தொகுதிகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 23 இடங்களும், பா.ஜ.க-வுக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
போடி தொகுதியில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி சண்முகம், ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் எஸ்.பி சண்முகநாதன், மற்றும் நிலக்கோட்டை தொகுதியில் திருமதி தேன்மொழி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 171 தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இன்று வெளியானது. அதேவேளையில் பா.ம.க மற்றும் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. அதிமுக அமைச்சர்கள் அந்தந்த தொகுதியிலே போட்டியிடுங்கள் என முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.
அதிமுக அமைச்சர்களுக்கு மீண்டும் சீட்டு உறுதி என்ற நிலைதான் இருந்தது. இன்று வெளியான இரண்டாம் கட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் அ.தி.மு.க அமைச்சர்களான நிலோபர் கபில், வளர்மதி, பாஸ்கரன் ஆகியோர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.
அதேபோல் அ.தி.மு.க மூத்த தலைவரும் மேட்டூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவான செம்மலைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேவேளையில் முன்னாள் அமைச்சர்களான
பி.வி.ரமணா, மூர்த்தி, கோகுல இந்திரா, பா.வளர்மதி, சின்னய்யா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பி.வி.ரமணா, மூர்த்தி, கோகுல இந்திரா, பா.வளர்மதி, சின்னய்யா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. வேட்பாளர்கள் தேர்வும் மிகவும் கவனமாக கையாளப்பட்டுள்ளது. ஒரே நாளில் அ.தி.மு.க-வினர் வேட்பாளர் நேர்காணலை நடத்தி முடித்திருந்தனர். அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை பார்த்தால் சீனியர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவரும்.
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த போது அதிமுக வேட்பாளர் தேர்வில் புதியவர்களுக்கு இடமளிக்கப்படும். கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் சாதாரண தொண்டனும் எந்தப்பதவிக்கு வரலாம் என்ற நிலைதான் அதிமுகவில் இருந்தது. அதிமுக அமைச்சரவையில் இருக்கும் எத்தனையோ அமைச்சர்களை உதாரணமாக சொல்லலாம்.
தற்போது வெளியாகியிருக்கும் வேட்பாளர் பட்டியலை கவனித்தால் புதியவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.
தொகுதியில் அதிக அறிமுகம் இல்லாத புதிய வேட்பாளர்களை களமிறக்கி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என தற்போதைய அதிமுக தலைமை முடிவு செய்திருக்கலாம். முன்னாள் அமைச்சர்கள் பலர் களத்திற்கு வந்துள்ளதால் ‘அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர்கள்’ என அதிமுக தரப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும். கூட்டணி கட்சியான பாஜக கேட்ட சில தொகுதிகளுக்கு அதிமுக ‘நோ’சொல்லியுள்ளது.
திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி பாஜக கேட்டு வந்ததாகவும் அங்கு குஷ்பு களமிறக்கப்படுவார் எனப் பேசப்பட்டது. இந்நிலையில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவையில் பாஜகவுக்கு சில தொகுதிகளை ஒதுக்கக்கூடாது என உள்ளூர் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன், அண்ணாமலை போன்றோர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியானது.
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. இங்கு பாஜக போட்டியிடுவதாக வெளியான தகவலால் தொண்டர்கள் சற்று ஆத்திரமடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவைப் பகுதி இன்று பரபரப்பாக இருந்தது. இந்நிலையில் பாஜகவுக்கு கோவை தெற்கு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எழும்பூர் தொகுதியும், என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கியுள்ளனர். புரட்சிபாரதம் கட்சிக்கு கே.வி. குப்பம் தொகுதியும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு கும்பகோணம் சட்டபேரவை தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இதுவரை 224 தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இன்னும் 10 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளனர். திரு.வி.க.நகர், ஈரோடு கிழக்கு, பெரம்பலூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுரை( மத்தி), திருச்சுழி, தூத்துக்குடி, பத்மநாமபுரம், கிள்ளியூர் தொகுதிகள் விடுபட்டுள்ளது.