தமிழகத்தில் கலவரம் செய்ய திட்டம்: டிஜிபி-யிடம் புகார் அளித்த பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

 


தமிழகத்தில் கலவரம் செய்ய சசிகலா, டிடிவி தினகரன் அவரது ஆட்கள் முடிவு செய்து பேட்டி அளிக்கிறார்கள், அவர்கள் பழியை அதிமுக மீது போட திட்டமிட்டுள்ளனர், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளோம் என டிஜிபியிடம் புகார் அளித்தப்பின் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்தார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் டிஜிபி திரிபாதியை சந்தித்தனர். பின்னர் வெளியில் வந்த அவர்கள் சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டி வருமாறு:

“பிப்ரவரி 8-ம் தேதி சசிகலா சென்னை திரும்புவதாக சொல்கிறார்கள் அதுகுறித்து எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலா அதிமுக கொடியுடன் சென்னைக்கு வருவார், இதுகுறித்து டிஜிபியிடம் மனு கொடுத்தாலும் சரி, முப்படை தளபதிகளிடம் மனு கொடுத்தாலும் சரி எங்களைத் தடுக்க முடியாது என்று சொல்கிறார்.

அது மட்டுமல்லாமல் நேற்று பெங்களூருவில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் ஆட்கள் பேட்டி அளிக்கிறார்கள். நாங்கள் 100 பேர் மனித வெடிகுண்டுகளாக மாறி தமிழகத்துக்குஇ வருவோம் என்று மிகப்பெரிய அச்சுறுத்தலை, கொலை மிரட்டலை தமிழகத்தின் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில், பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும், இருவேறு சாரர் இடையே விரோதத்தைத் தூண்டி கலவரம் விளைவிக்கும் வகையில் இன்றைக்கு சசிகலாவும், அவரைச் சார்ந்தவர்களும், டிடிவி தினகரனும் திட்டம் தீட்டி செயல்படுகிறார்கள்.

தன் பின்னர் பல தேர்தல்களை இரட்டை இலை மூலம் சந்தித்துள்ளோம், ஆனால் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள சசிகலாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கலவரத்தை தூண்டும் வகையில், பொதுமக்களின் அமைதியை பாதிப்பு ஏற்படும் வகையில் இன்றைக்கு செயல்படுகிறார்கள். அதன் மூலம் இந்தப் பழியை அதிமுக மீது போட அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

ஆகவே அந்தத் திட்டத்தைத் தடுக்கவேண்டும். அவர்கள் சதி செயலுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை, அதிமுக கொடியை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட முயல்வதை தடுக்க டிஜிபியிடம் மனு அளித்துள்ளோம்.

ஆளுங்கட்சியாக இருக்கும் நீங்கள் காவல்துறையில் இவ்வாறு புகார் அளிக்கலாமா?

ஆளுங்கட்சியாக இருந்தாலும், அம்பானியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், சாதாரண வார்டு கவுன்சிலராக இருந்தாலும், சாதாரண தனி மனிதனாக இருந்தாலும் ஏதாவது குற்றம் நிகழ்ந்தால் காவல்துறையில் புகார் அளித்து சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர நேரடியாக சட்டத்தை கையிலெடுக்க முடியாது.

இரண்டு நாள் முன்னர் புகார் அளித்தீர்கள் மறுபடியும் புகாரா?

இதற்கு முன் சசிகலா அதிமுகவின் கொடியைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக புகார் அளித்தோம், இன்று அவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தி பொதுமக்கள் உயிருக்கும், உடமைக்கும் குந்தகம் விளைவிப்பதை தடுக்க புகார் அளித்துள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்