பாலியல் தொல்லையை அனுமதிக்க மாட்டோம்: களத்தில் இறங்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம்

 


பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகாரை அக்கறையுடன் பார்ப்பதாகத் தெரிவித்துள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம், பணியிடங்களில் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதை அனுமதிக்க முடியாது, பெண் அதிகாரி மீதான பாலியல் தொல்லை குறித்த புகாரின் மீது உரிய, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாகச் சந்தித்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகவும், அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் - ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த விவகாரம் பெரிதானது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆதரவாகவும், சம்பந்தப்பட்ட சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கவும் பல ஐபிஎஸ் அதிகாரிகள் மறைமுகமாக வலியுறுத்தினர். பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கு ஆதரவாகச் சம்பந்தப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலரும் குரல் கொடுத்தனர்.

தமிழக முக்கிய எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்தார். நடவடிக்கை எடுக்கத் தவறினால் பாதுகாக்க நினைத்தால் திமுக சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அது போதாது, அவரைப் பணியிடை நீக்கம் செய்யவேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும், தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும், மவுனமாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் விவகாரம் குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தப் புகாரை அக்கறையோடு கவனிப்பதாகவும், உரிய வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

“பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரியால் நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்த புகாரை ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அக்கறையுடன் பார்க்கிறது. பணியிடங்களில் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஒன்றுபட்டு நிற்கிறது.

தமிழக அரசு சம்பந்தப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரியை இடமாற்றம் செய்து இதுகுறித்து விசாரணை நடத்த கமிட்டியையும் அமைத்துள்ளது. விசாரணை கமிட்டி இந்த விவகாரத்தின் ஆழமான நிலையைக் கருத்தில் கொண்டு சுதந்திரமான, நியாயமான, விரைவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)