தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் போலீசாருக்கு அறிவுறுத்தல்..!

 


வழக்குத் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்போது, மதுபோதையில் இருக்கும் நபர்களை கவனமுடன் கையாள வேண்டும் என்று போலீசாருக்கு தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலு. இவர் அந்த எல்லைக்குட்பட்ட கொற்கை விலக்குப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது சரக்கு வாகனம் ஓட்டி வந்த முருகவேல் என்பவரை தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து முருகவேலிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கண்டித்ததுடன் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்து, காவல் நிலையம் எடுத்து சென்றார். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல், அன்றிரவே எஸ்ஐ பாலு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது, ஆட்டோவை மோதி கொன்றார். இச்சம்பவம் காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காவலர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், “மது போதையில் இருக்கும் நபர்களை கவனமுடன் கையாள வேண்டும். ஏரல் காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில், தகாத வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், போதையில் உள்ள சந்தேக நபர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரிக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார். .