விதிகளை மீறுபவர்கள் யாரும் இனி தப்பிக்க முடியாது


போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை, உரிய விதிமுறைகளை கடைபிடிக்கச் செய்வதற்காக காவக் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். இதில், சில நேரங்களில் தகராறு ஏற்படுகிறது.

வாகன தணிக்கையில் ஈடுபடும்போது, போலீசார் வரம்பு மீறுவதாகவும், பிரச்னையில் ஈடுபடுவதாகவும் அவ்வப்போது புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. அதேபோல வாகன ஓட்டிகள் போலீசாருடன் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழாமல் இல்லை. இதற்காக பணியில் உள்ள போலீஸ் மற்றும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் வகையில், காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் 'பாடி ஓன் கேமிரா' திட்டம்.

போலீசாரின் சட்டையில் பொருத்தப்பட்டுள்ள இந்த கேமரா மூலம் இருதரப்பையும் கண்காணிக்க முடியும். போலீசார், வாகன ஓட்டிகள் இடையிலான தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும். இந்த திட்டம் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் சேலத்தில் பணியாற்றும் காவலர்கள் ரோந்து செல்லும் போது சட்டையில் வைத்து கண்காணிக்க Body Worn Camera இன்று காலை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை சேலம் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் வழங்கினார்.

போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா எதிரில் உள்ள வாகன ஓட்டிகளைத் துல்லியமாக படம் பிடிக்கும். மேலும் போலீஸார் மற்றும் வாகன ஓட்டிகளின் உரையாடல்கள் துல்லியமாக பதிவாகும். 10 முதல் 15 அடி தூரத்தில் நின்று பேசினால் கூட ஒலி, ஒளியை பதிவு செய்ய முடியும். 360 டிகிரி சுழலும். 15 நாட்கள் வரை தொடர்ந்து பதிவு செய்துகொள்ள முடியும்.

இந்த நவீன கேமராவை ரோந்து செல்லும்போது கட்டாயம் காவலர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். பயன்படுத்தாமல் விட்டு விட கூடாது. ரோந்து செல்லும் போது யாரும் குடிபோதையில் தகராறு செய்தாலோ அல்லது சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்போதோ இந்த கேமரா மூலம் அந்த காட்சிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கேமராவில் எடுத்த காட்சிகள் நீதிமன்றத்தில் காட்ட பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலம் அந்த பதிவுகள் விதிமுறை மீறுவோர் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரமாகவும், காவலர்கள் மீது பொதுமக்கள் கூறும் பொய்யான புகார்களில் இருந்து உங்களை குற்றமற்றவர்களாக நிரூபித்துகொள்ளவும் என இரண்டு பயன்களை பெறலாம் என்று சேலம் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் காவலர்களிடம் தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)