காதலிக்க வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி தற்கொலை... சடலத்தை பார்க்க வந்த இளைஞருக்கு தர்ம அடி


 நாமக்கல் அருகே இளைஞர் காதலிக்க வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையில் உள்ள குச்சிக்காடு பகுதியில் மாணவி அனிதா என்பவர் வசித்து வந்தார் .19 வயதாகும் இவர், அங்குள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கொரோனா தொற்றால் கல்லூரி மூடப்பட்ட நிலையில், வீட்டில் இருந்தபடியே ஆன் லைன் வகுப்பில் பங்கேற்று வந்தார். மாலை நேரத்தில் தன் வீட்டில் உள்ள ஆடு, மாடுகளை மேய்த்து வந்துள்ளார்.

அனிதாவை, பட்டணம் பகுதியை சேர்ந்த வல்லரசு என்ற இளைஞர் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார் . அனிதா காதலிக்க மறுத்து வந்த நிலையில், தன்னை காதலிக்கும்படி வல்லரசு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். செவ்வாய்க்கிழமையன்று அனிதா ஆடு மாடுகளை மேய்க்க சென்ற போது, அனிதாவை வழிமறித்த வல்லரசு , தன்னை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தினார். வல்லரசு கொடுத் தொடர் தொல்லையால் மன உளைச்சலில் இருந்துவந்த அனிதா , நேற்று வீட்டில் யாருமில்லாத போது தற்கொலை செய்து கொண்டார்.

அனிதா தற்கொலையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வல்லரசு, தன் நண்பர்கள் அய்யமுத்து மற்றும் கோகுல்நாத்துடன், அனிதா வீட்டுக்கு சென்றார். வல்லரசை கண்டு ஆத்திரமடைந்த அனிதாவின் தங்கை, தன் அக்காவின் சாவுக்கு வல்லரசு தான் காரணம் என்று அங்கிருந்தவர்களிடத்தில் கூறினார்.

இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் , வல்லரசு அவரின் நண்பர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற நாமகிரிப்பேட்டை காவல்துறையினர், வல்லரசு மற்றும் நண்பர்களை மீட்டனர்.

ஆனாலும், ஆத்திரம் அடங்காத அனிதாவின் உறவினர்கள், வல்லரசையும் அய்யாமுத்துவையும் தங்களிடம் ஒப்படைக்க கூறி காவல்துறை வாகனத்தை சிறைபிடித்தனர். சுமார் நான்கு மணி நேரம் , காவல்துறை வாகனம் சிறைபிடிக்கப்பட்டதால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

இதை தொடர்ந்து, ராசிபுரம் துணை கண்காணிப்பாளர் , வட்டாட்சியர் பாஸ்கர் ஆகியோர் , அனிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறவினர்களிடத்தில் உறுதி அளித்தனர். தொடர்ந்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர். அனிதாவின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனிதாவும், வல்லரசும் வெவ்வேறு சாதிப்பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், நாமகிரிபேட்டையில் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்கும் விதத்தில் அதிரடிப் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.