கண்டுகொள்ளாத காவல்துறை... கள்ளக்குறிச்சியில் தொடரும் திருட்டு மற்றும் கொள்ளை... அச்சத்தில் பொதுமக்கள்!

 


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடக்கும் தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல கொள்ளை சம்பவம் அரங்கேறிவருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் களவுபோயுள்ளன. இது பற்றி திருக்கோவிலூர் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வண்டியைப் பறிகொடுத்தவர்கள் வேதனையுடன் சொல்கின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் மணிகண்டனும் ஒருவர். மணிகண்டன் அவருடைய பல்சர் வாகனத்தை, டிசம்பர் 2 - ம் தேதி தன் வீட்டின் முன் உள்ள சாலையில் நிறுத்திவிட்டு இரவு உறங்கச்சென்றிருக்கிறார். பொழுது விடிந்ததும் எழுந்து பார்த்தபோது அவரது வண்டியைக் காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்துள்ளார் மணிகண்டன். தெற்கு வீதி அருகேயுள்ள, ஜி.அரியூரில் உள்ள பெட்ரோல் பங்க் வழியாக மணிகண்டனின் பல்சர் பைக்கை திருடிய திருடர்கள் இருவரும் சாவகாசமாக, திருட்டு வண்டிக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டுச் சென்றது தெரியவந்தது. முகமூடி அணியாமல் திருட்டு பைக்கில் உல்லாசமாக சுற்றித்திரிந்த திருடர்களின் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து மணிகண்டன் திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இருப்பினும் திருக்கோவிலூர் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மணிகண்டன் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

பைக் திருட்டு மட்டுமல்லாமல் அண்மைக்காலங்களில் திருக்கோவிலூரை சுற்றியுள்ள பகுதிகளில், தீரன் பட பாணியில், வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் துணிகர சம்பவமும் ஆங்காங்கே அரங்கேறிவருகிறது. தங்கள் பகுதியில் நடக்கும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களைப் பற்றிப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தும், திருக்கோவிலூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என்று மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்வதில்லை என்று மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இது தொடர்பாக திருக்கோவிலூர் காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வியெழுப்பினால், போதிய காவலர்கள் இல்லாததால் பணிச்சுமை அதிகமாக உள்ளதாகவும், அதனால் அப்பகுதியில் நடக்கும் திருட்டு சம்பவங்கள் தொடர்பான புகார்களை ஏற்பதில்லை என்றும் காவல்துறையினர் பதிலளிப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், திருக்கோவிலூரை சுற்றியுள்ள மக்கள், இன்று என்ன நடக்குமோ, நாளை என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனே வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் போதுமான காவலர்களை பணியமர்த்தக் கூறி மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு