ஓ.பன்னீர்செல்வம் ராவணனுடன் சேர்ந்தது அவருக்கு பிரச்னை - டிடிவி தினகரன்

 


பரதன் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒ.பன்னீர் செல்வம், ராவணனிடம் சென்று சேர்ந்து விட்டார். அப்படி சேராமல் இருந்திருந்தால் அவர் பிப்ரவரியில் மீண்டும் பரதனாகி இருக்கலாம் என தினகரன் பேட்டியளித்துள்ளார்.

அமமுகவின் மாநில பொருளாளரும், தமிழக அரசின் முன்னாள் கொறடாவுமாகிய மனோகரனின் தாயார் ராமலெட்சுமி அம்மாள் நேற்று உடல் நல குறைவால் திருச்சியில் காலமானார். இதையடுத்து திருச்சியில் உள்ள மனோகரனின் இல்லத்தில் அவர் தாயாரின் உருவப்படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்...

ஜனநாயக முறையில் அதிமுகவை மீட்போம். சசிகலா விடுதலை ஆன பின்பு அதிமுகவினர் எங்களிடம் வந்து இணைவார்கள் என நான் எப்போதும் கூறவில்லை. நிச்சயம் கூட்டணி அமைத்து தான் வரும் தேர்தலை சந்திப்போம். அமமுக தொண்டர்கள் பலத்தோடு தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை தருவோம்.

மத்திய பட்ஜெட்டில் கொஞ்சம் நன்மைகளும் நிறைய தீமைகளும் உள்ளன. அதேபோல அதிமுக அரசும் தப்பித்தவறி ஒரு சில நன்மைகளை அத்திப்பூத்தார்போல் செய்திருக்கலாம். அது ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட திட்டங்களாக, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டவைகளாக இருக்கும்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் 15 விழுக்காடு வாக்குகளை பெற்றோம். சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று சாதனை புரிந்ததைபோல நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம்.

திமுக தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் என தான் குறிப்பிட்டுள்ளேன். அப்படி நிகழ்ந்தால் கூட எங்களது அரசியல் பணி தொடரும். பா.ஜ.கவிடம் நாங்கள் கைகோர்த்து இருக்கவில்லை. தேவையான நேரத்தில் மட்டுமே நாங்கள் விமர்சிப்போம். சிலரை போல தேவையில்லாமல் யாரையும் விமர்சிக்கமாட்டோம்.

ஸ்லீப்பர்செல் என்பவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவோ, பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ இருக்க வேண்டும் என்பது அல்ல. அதிமுகவின் உண்மை தொண்டர்கள்தான் ஸ்லீப்பர் செல்கள். சசிகலாவை வரவேற்றபோது அதனை மக்கள் பார்த்தார்கள். உதாரணமாக சசிகலாவை காரில் அழைத்து வந்த சம்மங்கி, தட்ஷணாமூர்த்தி உள்ளிட்டவர்கள்கூட ஸ்லீப்பர் செல்கள்.

தமிழக அரசு வெற்றி நடை போடவில்லை. இது தள்ளாடும் அரசு. மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு போய் சேரவில்லை. அதனால்தான் விளம்பரம் செய்கிறார்கள். மக்களுக்கு நன்மை செய்யாத அரசாங்கம், மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுப்பார்கள் என அண்ணா கூறியுள்ளார்.

பரதன் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒ.பன்னீர்செல்வம் ராவணனிடம் சென்று சேர்ந்து விட்டார். அப்படி சேராமல் இருந்திருந்தால், அவர் பிப்ரவரியில் மீண்டும் பரதனாகி இருக்கலாம். அவர் ராவணிடம் சேர்ந்தது அவருக்கும் பிரச்னை நாட்டுக்கும் பிரச்னை" என்றார்.