அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மூன்றரை மணி நேரத்தில் மீட்பு


 கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை மூன்றரை மணி நேரத்தில் மீட்கப்பட்டது. 

கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் க.சாந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். 

இதில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் குழந்தை இருப்பது தெரிய வந்தது. 
இதனையடுத்து புதுவை மாநில போலீஸாருடன் இணைந்து குழந்தையை மீட்டனர்‌. இதுதொடர்பாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ்குமாரமங்கலத்தைச் சேர்ந்த சிலம்பரசன் மனைவி நர்மதா (19) என்பவரை கைது செய்து குழந்தையை மீட்டனர். 

பின்னர் காவல் கண்காணிப்பாளர் அந்த குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தார். குழந்தை காணாமல் போன மூன்றரை மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்