உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் வேண்டி மனு
திருப்பூா் பிப் 21 மின்சார வாரிய தொமுச சார்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர்.
திமுகழக தலைவர் தளபதி அவர்கள் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் மகத்தான திட்டத்தை அறிவித்து தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவரவர் கோரிக்கைகளை பெற்று வருகிறார்.
பொதுமக்களின் கோரிக்கைகளை திமுகழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றப்படும் எனக்கூறி இருப்பது பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது. இக்கூட்டங்களில் கூடும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் கோரிக்கை மனுக்களை நம்பிக்கையுடன் தலைவர் ஸ்டாலினிடம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு தெற்கு, மற்றும் அவிநாசி தொகுதிகளை உள்ளடக்கிய மக்களை 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூா் மாநகரம் காங்கயம் சாலை ராக்கியா பாளையம் பிரிவு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தொழிலாளர்களையும், பொது மக்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று சிறப்புரையாற்றினார்.
அப்பொழுது பல ஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்யப்படாமல் பணியாற்றி வரும் மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக தலைவர் தளபதி அவர்களிடம் மனு அளிக்க 100 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக ஒன்றிணைந்து மின்சார வாரிய தொமுச செயலாளர் அ.சரவணன் தலைமையில் வந்து மனு அளித்தனர்.
திருப்பூர் மத்திய மாவட்ட திமுகழக செயலாளர் க.செல்வராஜ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் தொமுச பேரவை மாநில துணை செயலாளர் டி.கே.டி. மு. நாகராசன் அவர்களின் வழிகாட்டுதலோடு திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியிலுள்ள மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், தொமுச நிர்வாகிகள், தொழிலாளர்கள் , இளைஞர்கள், பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் அ. சரவணன் உள்ளிட்டோர்கள் திமுகழக தலைவர் தளபதியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.
மின்வாரியத்தில் தற்போது சுமார் 47,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் 21,600 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு ஆட்சி மாற்றத்தால் கடந்த 2011ல் இருந்து எந்தவொரு ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிநிரந்தரம் செய்யவில்லை திடீரென தமிழக வரலாற்றில் இல்லாத கேங்மேன் என்ற பதவி ஒன்றை உருவாக்கி மின்வாரியமும், ஆளும் கட்சியும் விரும்புவோரை பணியில் சேர்த்திட திட்டம் தீட்டி உள்ளதாக தெரிகிறது.
கடந்த திமுக ஆட்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டார்கள். இதனால் மின்வாரியத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தாங்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் விரைவாக பணிநிரந்தரம் செய்ய வழிவகை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.