நான் பத்து வருஷமாவே லாக்டவுனில் தான் இருக்கிறேன்... வேதனை தெரிவித்த வடிவேலு!
கடந்த 10 வருடமாக படங்களில் எதுவும் நடிக்க வாய்ப்பில்லாமல் லாக் டளெனிலேயே வாழ்ந்து வருவதாக நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார்.
நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் மீம்ஸ் உலகத்தில் ராஜாவாக வாழ்ந்து வருகிறார்.
நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞர். அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம்.
அத்தகைய அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும், ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்டவர்தான் வைகைப்புயல் வடிவேலு.
தற்போது மீம்ஸ் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் வடிவேலு தற்போது சரியான படங்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வடிவேலு கர்ணன் படத்தில் இடம்பெற்ற சேராத இடத்தில் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா என்ற பாடலைப் பாடி கண் கலங்கினார்.
தொடர்ந்து பேசிய வடிவேலு, தனக்கு நடிக்க ஆசையாக இருக்கிறது. உடலிலும் தெம்பு இருக்கிறது என்றும் ஆனால் யாரும் தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றும் கூறினார். மேலும் நீங்கள் அனைவரும் ஒரு வருடமாகத் தான் லாக்டவுனில் இருக்கிறீர்கள், ஆனால் நான் பத்து வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன் என்று அவர் வருத்தமுடன் கூறியது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியது.
ஒருநாள் கூட ஓய்வில்லாமல் நடித்து வந்து கோடிக்கணக்கான மக்களை சிரிக்க வைத்த வடிவேலு, தற்போது கண்கலங்கியபடி ஒரு படம் கூட இல்லாமல் இருப்பதாக வருத்தமுடன் அவர் பேசியதைக் கேட்ட அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக சமூகவலைத் தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.