ஜூஸ் கடைக்காரரை பிழிந்து லஞ்சம் குடித்த எஸ்.ஐ - போலீஸ் கைது..!

 


சென்னை பூக்கடையில் நீதிமன்ற அனுமதி பெற்று சாலையோரம் தள்ளுவண்டியில் ஜூஸ்கடை வைத்திருந்தவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டு ஆகிய இருவர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் நாராயண முதலி தெரு சந்திப்பில் சாலையோரம் ஜூஸ் கடை நடத்தி வந்தவர் திருமலை..!

நீதிமன்ற அனுமதி பெற்று சாலையோரம் தள்ளுவண்டியில் ஜூஸ் கடை நடத்தி வந்தாலும் ஜூஸ் கடையை பிரச்சனையில்லாமல் நடத்த வேண்டும் என்றால் மாதம் 300 ரூபாய் தரவேண்டும் என பூக்கடை போக்குவரத்து போலீஸ் ஏட்டு நாகராஜ் லஞ்சம் கேட்டு மிரட்டி வாங்கிச்சென்றதாக கூறப்படுகின்றது.

முன்னதாக பூக்கடையில் போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ஜெயவேல் என்பவரிடம் மாதம் 500 ரூபாய் லஞ்சம் கொடுத்து வந்த திருமலை அவர் யானைக்கவுனி காவல் நிலைய போக்குவரத்து பிரிவுக்கு மாறுதலாகி சென்ற உடன் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். அதற்குள்ளாக தலைமைக் காவலர் நாகராஜ் லஞ்சம் கேட்டு மிரட்ட தொடங்கியதால் மறுபடியும் முதலில் இருந்தா ? என்று அரண்டு போனார்.

இந்நிலையில் மாறுதலாகி யானைக்கவுனிக்கு சென்ற போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஜெயவேலும், வந்து தனக்கும் மாதம் 500 ரூபாய் தொடர்ந்து தர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். இருதலை கொள்ளியாக தவித்த திருமலை, உதவி ஆய்வாளரிடம் பணம் தர முடியாது என்று கூற அவர் கடையை கவிழ்த்து பழங்களை சாலையில் கொட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த திருமலை இரு போலீசாரின் மாமூல் போட்டி குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களின் யோசனைப்படி, ஏட்டு நாகராஜ், எஸ்.ஐ ஜெயவேல் ஆகிய இரண்டு பேரையும் லஞ்ச பணத்தை பெற்றுக்கொள்ள, பூக்கடை காவல் நிலையம் அருகே வரவழைத்து எஸ்.ஐக்கு 500 ரூபாயும் ஏட்டுவுக்கு 300 ரூபாயும் கொடுத்தார் லஞ்சப்பணத்தை வாங்கி பையில் திணிப்பதற்குள், இரு போக்குவரத்து வசூல் போலீசாரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சென்னையில் பூக்கடை மற்றும் யானை கவுனி போக்குவரத்து போலீசாரின் கட்டுபாட்டில் சவுக்கார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் தெரு, ஈவ்னிங் பஜார் போன்ற பகுதிகளில் வாகனங்கள் செல்ல வேண்டுமானால் ஊர்ந்து தான் செல்ல வேண்டும். சாலையை ஆக்கிரமித்து நிறுத்தியிருக்கும் வாகனங்களால் பூக்கடை காவல் நிலையத்திற்கு எதிரிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும், அதனை சரி செய்ய போக்குவரத்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி வியாபாரிகள், வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசலை மறந்து வியாபாரிகளிடம் மாமூல் வாங்குவதில் முனைப்பு காட்டி இருப்பது இந்த சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!