கல்லூரி முதல்வரைத் தாக்கிய மாணவர்கள்... வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

 


தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மேல நீலிதநல்லூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் முதல்வராக ஹரிகெங்காராம் என்பவர் பணியாற்றி வருகிறார். இங்கு உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த சிவகுமார் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அந்த உதவிப் பேராசிரியர் நேற்றைய தினம் பணியில் சேரவந்துள்ளார். அவரிடம் முதல்வர், இன்னமும் சஸ்பெண்ட் பீரியட் முடியவில்லை. மேலும் இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், அது முடிவடையவில்லை. எனவே பணியில் சேர்க்க முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது.

அது சமயம் உதவிப் பேராசிரியர் சிவக்குமாருக்கு ஆதரவாகச் சில மாணவர்கள் கல்லூரி முதல்வரைத் தாக்கியதாகத் தெரியவரவே, அதில் காயமடைந்த முதல்வர் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பான புகாரின் பேரில் கல்லூரி மாணவர்கள் சிலரின் மீது வழக்குப் பதிவு செய்த பனவடலிசத்திரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கல்லூரி முதல்வர் மாணவர்களால் தாக்கப்பட்டது மேலநீலித வட்டாரத்தைப் பரபரப்பாக்கியிருக்கிறது.