தமிழகத்துக்கு பணம் கொண்டு வருவதை தடுக்க எல்லைகளில் தீவிர சோதனை: காவல் துறை அதிகாரிகள் உத்தரவு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்து பணம் கொண்டு வருவதை தடுக்க தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் தீவிர வாகனசோதனைகள் நடத்த காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. சட்டப்பேரவை தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரவின்பேரில் இப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டுவரப்படலாம் என்று காவல் துறையினர் தகவல் கொடுத்துள்ளனர்.
எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து மாநில எல்லைகளிலும் தீவிர வாகன சோதனைகள் நடத்த, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனைகள் நடத்த அந்தந்த பகுதி காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
8 வழிகளில்...
தமிழகத்தை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 4 மாநில எல்லைகளில் இன்று (22-ம் தேதி) முதல் தீவிர சோதனைகள் நடத்தப்பட உள்ளன.
குறிப்பாக ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் 8 வழிகளில் கூடுதல் போலீஸாரை நிறுத்தி, சோதனை நடத்த காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.