நடுத்தெருவில் மோதிக்கொண்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள்

 


ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்தில் இருக்கும் பாலதொழுவு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த தங்கமணி. ஊராட்சிமன்ற துணைத் தலைவராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த சத்யப்பிரியா. இவர்கள் இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் பஞ்சாயத்து நிர்வாகத்தில் அடிக்கடி மோதலும் நீடித்து வந்ததாக சொல்லப்படுகின்றது.

இவர்கள் இருவரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, கிராம மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மெத்தனம் காட்டி வந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. இந்நிலையில், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதால் பாலதொழுவு ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அங்கே குடிநீர்த் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், அந்த ஊராட்சியில் புதிதாக ஆழ்குழாய்க் கிணறு அமைப்பதற்காக, தமிழக அரசிடம் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயைத் ஊராட்சிமன்றத் தலைவர் தங்கமணி பெற்றுள்ளார். இந்த பணத்தைக் கொண்டு போர்வெல் அமைக்க, துணைத்தலைவரின் கையொப்பமும் வேண்டும் என்பதால் சத்யபிரியாவிடம் தங்கமணி கையொப்பம் கேட்டுள்ளார்.

ஆனால், கையொப்பம் போடாமல் சத்யப்பிரியா அலைக்கழித்தால், இதனை தட்டிக்கேட்க அவரின் வீட்டிற்கு தலைவர் தங்கமணி சென்றுள்ளார். அப்பொழுது அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம், உங்களுக்குக் குடிநீர் கிடைக்காமல் இருப்பதற்கு சத்யப்பிரியாதான் காரணம் என்றும், போர்வெல் அமைக்கக் கையொப்பமிடாமல் அவர் அலைக்கழிப்பதாகவும் தங்கமணி குற்றம்சாட்டி இருக்கிறார்.


இதைக் கேட்டு ஆத்திரமம் அடைந்த சத்யப்பிரியா, தலைவி தங்கமணியின் கன்னத்தில் அடித்ததாகக் கூறப்படுகின்றது. பதிலுக்குத் சத்யப்பிரியாவின் தலைமுடியைப் பிடித்து தங்கமணி தாக்குதல் நடத்தியுள்ளார். நடுரோட்டில், இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இந்நிலையில், இருவரும் தனித்தனியாக சென்னிமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் தங்கமணி அளித்த புகாரின் பேரில் துணைத்தலைவர் சத்யப்பிரியா மீது 4 பிரிவின் கீழும், துணைத்தலைவர் சத்யப்பிரியா அளித்த புகாரின் பேரில் தலைவர் தங்கமணி மீது 3 பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு