முன்னாள் அமைச்சர் பெங்களூருவில் முகாம்: அதிமுகவின் முதல் விக்கெட்? : பரபரப்பு தகவல்கள்


சென்னை: அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் மணிகண்டன் பெங்களூருவில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் சசிகலாவை, சந்தித்து, அவர் அணி மாற உள்ளார் என்றும் கூறப்படுகிறது. முதல் விக்கெட் இவர், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழும் என்று அமமுக நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து, தற்போது சசிகலா விடுதலையாகி உள்ளனார்.

ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த நிலையில் அவர் பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். வரும் 7ம் தேதி அவர் சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் எம்எல்ஏவுமான டாக்டர் மணிகண்டன், கடந்த 2 நாட்களுக்கு முன்னர், தனது ஆதரவாளர்கள் சிலருடன் பெங்களூருவுக்கு ரகசியமாக சென்றுள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

சசிகலாவின் தீவிர ஆதரவாளரான டாக்டர் மணிகண்டன், கடந்த தேர்தலில் அவரது தயவினால்தான் சீட் வாங்கினார். வெற்றி பெற்ற பின்னர், அவரது சிபாரிசில்தான் அமைச்சரும் ஆனார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பதவி பறிக்கப்பட்ட ஒரே அமைச்சரும் இவரே. அமைச்சர் பதவி பறிபோன விரக்தியில் இருந்த இவர், 10 நாட்களுக்கு முன்னர் தனது வீடு இருக்கும் பகுதியில் கழிவுநீர் சூழ்ந்துள்ளது என்று கூறி, நகராட்சிக்கு எதிராக தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தற்போது பெங்களூரு சென்றுள்ள அவர், சசிகலாவை நேரில் சந்தித்து பேச முயற்சி செய்து வருகிறார் என்றும், அதற்காக அங்கேயே முகாமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் தொகுதியில் அவருக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவுகிறது. இதனால் அவர் சசிகலாவுடன் சேர்ந்தாலும் கவலை இல்லை’ என்று கூறி வருகின்றனர்.

ஆனால் அணி மாறப்போகும் முதல் எம்எல்ஏ அவர்தான் என்றும், தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழும் என்றும் அமமுக நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா