அண்ணா நகரில் டீ குடித்த கேப்பில் அரசுப் பேருந்து கடத்தல்..

 


சென்னை திருமங்கலம் காவல் நிலையம் பின்புறம் உள்ளது சென்னை அண்ணா நகர் பணிமனை. அங்கு இரவு நேரத்தில் அரசுப் பேருந்துகளை ஓட்டுநர்கள் நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். செவ்வாய்க்கிழமை அதிகாலை நாலரை மணியளவில், சென்னை கோயம்பேட்டில் இருந்து அண்ணாசதுக்கம் வரை செல்லும் தடம் எண் 27 பி மாநகர பேருந்தை அண்ணா நகர் பணிமனையில் இருந்து ஓட்டுனர் வெளியே எடுத்து வந்தார்.

பணிமனை வாசலில் பேருந்தை இயக்கத்திலேயே நிறுத்தி விட்டு, அருகில் உள்ள கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் பேருந்து திடீரென புறப்பட்டு சாலையில் செல்லத் தொடங்கியது. அதைப் பார்த்துப் பதறிப் போன ஓட்டுநர் அலறியடித்துக் கொண்டு பி்ன்னாலேயே ஓடியுள்ளார். ஆனால் பேருந்தைக் கடத்திய மர்ம நபரோ வேகமாக இயக்கிச் சென்று விட்டார்.

பேருந்து சென்ற பாதையிலேயே நடந்து சென்ற ஓட்டுநர் ஆங்காங்கே விசாரித்துக் கொண்டே சென்ற நிலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில், பாடி மேம்பாலம் அருகில் மர்ம நபர் பேருந்தை விட்டு விட்டுத் தப்பியோடி விட்டார்.

பேருந்தை மீட்ட ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் பணிமனை கிளை மேலாளர் அன்பரசு, சென்னை திருமங்கலம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். பேருந்து கடத்திச் செல்லப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் பெரும்பாலானவை வேலை செய்யாதது தெரியவந்தது.

ஒரே ஒரு பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவியில் மட்டும் பேருந்து செல்வது பதிவாகியுள்ளது. சென்னையில், இதுவரை அரசுப் பேருந்தை கடத்தியதாக யாரும் சிக்காத நிலையில் குற்றவாளியைப் போலீசார் தேடி வருகின்றனர். அதிகாலையில் பணிமனை வாசலில் நின்றிருந்த அரசுப் பேருந்தை மர்ம நபர் கடத்திச் சென்று வழியிலேயே விட்டு விட்டுத் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.